கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரின் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இளங்குமரன், ரஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா, இராணுவத்தினர், பொலிஸார், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டன. அந்த வகையில் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையமானது கரைச்சி பிரதேச சபையினரிடம் கையளிக்கப்பட்டு இனிவரும் காலங்களில் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் கரைச்சி பிரதேச சபையினரே கையாள்வார்கள் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் பூநகரி கௌதாரி முனை பகுதியில் உள்ள மணல் திட்டுகள், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதை தடுக்கும் நோக்கில் அப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு முற்று முழுதாக தடை செய்யப்பட்டப்பட்டுள்ளது.
கல்மடுக் குளத்தின் அணைக்கட்டுகள் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாகவும் கல்மடுக் குளத்தின் கீழ்
இயங்கி வரும் மணல் விற்பனை நிலையத்தினை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக இயங்கி வருமாயின் கல்மடுக்குளம் காணாமல் போய்விடும் எனும் காரணத்தால் இந்த மணல் விற்பனை நிலையம் மூடப்படுகிறது.
இந்திய மீனவர்களின் விடயம் தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,
கச்சதீவு என்பது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. எனவே எந்த வகையிலும் கச்சதீவை இந்தியாவுக்கு தாரைவாக்க முடியாது எனவும் தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் தேர்தல்கள் வரும் பொழுது கச்சதீவு தேர்தல் காலங்களில் மாத்திரமே கதைப்பார்கள். சட்டத்திலோ அல்லது சர்வதேச சட்டத்திலோ கச்சதீவினை இந்தியாவுக்கு வழங்குவதற்கு இலங்கைச் சட்டத்தில் இடம் இல்லை என தெரிவித்தார்.
அத்துடன் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் பொழுது முதல் தடவையாக கைது செய்யப்படுபவர்கள் ஒரு வாரமோ அல்லது ஓரிரு தினங்களிலோ விடுதலை செய்யப்படுகிறார்கள் எனவும் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முற்படுத்தப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.