“முதலமைச்சர் தும்புத்தடி என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா?” எனத் தமிழ்த் தேசியப் பேரவையின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நிறுத்தப்படுவார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில், வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியிடம் யாழ். கொக்குவிலில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், “மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் நிச்சயம் நாங்கள் போட்டியிடுவோம். ஏனைய கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்களின் பெயர்களைக் கருத்தில் கொண்டால் நாங்கள் ஒரு தும்புத்தடியை நிறுத்தலாம் என நினைக்கின்றோம்” என்று கூறியிருந்தார்.
கஜேந்திரகுமாரின் மேற்படிக் கருத்து தொடர்பில் யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சிவாஜிலிங்கத்திடம் கேள்வி எழுப்பியபோது, “முதலமைச்சர் தும்புத்தடி என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன விளக்குமாறா?” என்று அவர் திரும்பக் கேள்வி எழுப்பினார்.