முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்திக் காட்டுமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது.
இந்தச் சவாலை முன்னாள் ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “அரசின் செயற்பாடுகளால் அதன் வாக்கு வங்கி சரிந்து வருகின்றது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.
வடக்கில் நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் கூட நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், படையினருக்குரிய கௌரவத்தை இந்த ஆட்சியாளர்கள் வழங்கவில்லை.
நாம் தமிழர்களுக்கு எதிராகப் போர் செய்யவில்லை. நாட்டு மக்களுக்கு வாழ்வதற்குரிய சூழ்நிலை இருக்கவில்லை. எனவே மக்களைப் பாதுகாப்பதற்காகவே போர் செய்யப்பட்டு, சுதந்திரம் பெறப்பட்டது. இந்நிலைமையை அநுர அரசு சீர்குலைக்கக்கூடாது.
பொய்களைச் சமூகமயப்படுத்தியதால் ஏற்படும் பிரதிபலன்களை இந்த அரசு விரைவில் உணரும்” என்றார்.