“உலகளாவிய ரீதியில் மீண்டும் பரவி வரும் கொவிட் வைரஸின் புதிய திரிபு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக” அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய (27) ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “கொவிட் வைரஸ் தொடர்பில் ஆபத்தான நிலைகள் நாட்டில் இல்லை என்றாலும், விமான நிலையங்களில் ஏற்கனவே சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
மேலும், தற்போது இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கொவிட் தொற்றின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இதனை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அது போன்ற நிலை எமது நாட்டில் இதுவரையில் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.
எனினும், இது தொடர்பான விழிப்பு நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இதேவேளை, எமது அண்டை நாடான இந்தியாவில் கொவிட் வைரஸின் புதிய திரிபினால் பாதிக்கப்பட்ட 1009 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன” என்றார்.