குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று (27) திருகோணமலை நகரில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் அவர்களும் இலங்கை தமிழரசு கட்சி கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கதிரவேலு சண்முகம் குகதாசனும் கையொப்பமிட்டனர்.
இது குறித்து ஊடக சந்திப்பின் போது இன்றைய தினம் (27) நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தெரிவிக்கையில், திருகோணமலை மாநகர சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபையிலும் ஆளுக்கால் உதவி புரிந்து ஆட்சி அமைப்போம் என்றும் கட்சி அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாடு கண்டுள்ளது. அதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் அவர்களது பெரும்பான்மை எங்கு இருக்குமோ அங்கு ஆட்சியமைப்பர் அதே போன்று இலங்கைத் தமிழரசு கட்சி பெரும்பான்மை உள்ள இடத்தில் தமிழரசு கட்சி ஆட்சியமைக்கும். நிதி ஒதுக்கீடு, நிர்வாகம், அதிகார பரவலாக்கம் உள்ளிட்ட மேலும் பல நிபந்தனைகளோடு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
குறித்த ஆட்சியமைப்பின் போது உடன்பாடுகள் பலவற்றுடன் உடன்பட்டனர். குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர், குச்சவெளி பிரதேச சபையில் அடுத்து வரும் இரு ஆண்டுகள் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர்.
அதேபோன்று மூதூர் பிரதேச சபையில் முதல் இரு ஆண்டுகளுக்கு தமிழரசு கட்சி உறுப்பினர் தவிசாளராகவும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவதுடன் அடுத்து வரும் இரு ஆண்டுகள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவிசாளராகவும் தமிழரசு கட்சி உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர்.
இதில் குச்சவெளி மூதூர் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
