“இயலாமையுடையவர்களின் இறுதி ஆயுதம் அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால், அதனைக் கொண்டு ஜனநாயகத்தை அழிக்க முடியாது. மக்களால் எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளில் நாம் ஆட்சியமைத்து மக்களுக்காகச் சேவையாற்றுவோம்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை இன்றியே வெற்றி பெற்றார். அதேபோன்று பெரும்பான்மை இன்றி உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்க முடியும் என்று எண்ணுகின்றார். அது தவறாகும். அதனைப் புரிந்து கொள்வதற்கு அவர் ஜூன் 2ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும்.
2ஆம் திகதி வாக்கெடுப்பின் பின்னரே ஜனாதிபதி அநுரகுமார முன்னிலையில் இருக்கின்றாரா அல்லது பின்தள்ளப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும். உள்ளூராட்சி மன்றங்களின் வருமானம் ஜனாதிபதி அநுரவிடமிருந்து கிடைப்பதில்லை. இங்கு கிடைக்கப் பெறும் நேரடி வருமானத்தைக் கொண்டு நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். எனவே, அரசு நிதி ஒதுக்கும் வரை காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படாது.
நிறைவேற்று அதிகாரத்துக்குச் சவால் விடுக்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இந்தத் தேர்தல் சட்டத்தை உருவாக்கினார். நிறைவேற்று அதிகாரம் இல்லாவிட்டாலும் கிராமத்துக்கு அதிகாரம் காணப்பட வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். எனவே, உள்ளூராட்சி சபைகளையும் பெலவத்த அலுவலகத்தில் கட்டுப்பாட்டில் எடுக்க நினைத்தால் அதற்கு எதிர்க்கட்சிகள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
இயலாமையுடையவர்களின் இறுதி ஆயுதம் அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால், அதனைக் கொண்டு ஜனநாயகத்தை அழிக்க முடியாது. கட்சித் தலைமையகத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய நாம் செயற்படுவோம். மக்களால் எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளில் நாம் ஆட்சியமைத்து மக்களுக்காகச் சேவையாற்றுவோம்.” – என்றார்.