மாகாண இடமாற்ற சபை உறுப்பினர் சோ. காண்டீபராசா நேற்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றம் 2024/2025 எனத் தலைப்பிட்டு வடக்கு மாகாண கல்வி பணிப்பாளரினால் 2025.5.26 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் இடமாற்ற சபையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகும்.
குறித்த இடமாற்றம் குறித்து மாகாண கல்வி பணிமனையால் பெயர் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இவ்விடமாற்ற செயற்பாட்டில் பல குறைபாடுகள் காணப்படுவதாக இலங்கை ஆசிரிய சங்கத்தினரால் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் சுட்டிக் காட்டப்பட்டியிருந்தது.
ஆயினும், எம்மால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் பரிசீலிக்கப்பட்டிராத நிலையில், இந்த இடமாற்றங்கள் முறைமைகள் பின்பற்றப்படாத இடமாற்றங்களாகும். இவ் இடமாற்றங்கள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இன்று (27.5.2025) வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடவுள்ள நிலையில் – தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் சகல அதிபர்களுக்கும் 26.5.2025 ஆம் திகதி இட்டு “ஆசிரிய சேவையில் வருடாந்த இடமாற்றம் 2024/2025 ” என தலைப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் 2025.5.30 ” கோரிப்பெறுவதற்கு எதுவுமில்லை சான்றிதழை ” வழங்க அதிபர்களுக்கு கட்டளை இட்டுள்ளதுடன் ஆசிரியர்களின் மேன்முறையீட்டையும் ஏற்க மறுத்துள்ளார்.
எமது தொழிற்சங்க முன்மொழிவுகளை உதாசீனம் செய்தும், இடமாற்றசபை மற்றும் இடமாற்ற மேன்முறையீட்டு சபையின்றியும் மேற்கொள்ளப்பட்ட குறித்த இடமாற்றங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கிறது.
இடமாற்றமொன்று வெளிமாவட்டங்களுக்கு வழங்கப்படும் போது பின்பற்றப்படும் கால அவகாசங்களை கூட வழங்க மனமற்ற வக்கிர மனம் கொண்ட இவ்வாறான வலயக் கல்வி அதிகாரிகளின் செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
ஆசிரியர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு இடமாற்றங்கள் சீராக்கப்படும் வரை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் இவ்வாறாக கால அவகாசங்கள் விதிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற அடாவடித்தனங்கள் தொடருமானால் தொழிற்சங்க நடவடிக்கை தவிர்க்க முடியாததாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.