“கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் இலை மடிச்சுக்கட்டியின் தாக்கம் சில பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும்” என கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அலுவலகத்தில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் 10,800 ஹெக்டேயர் அளவில் சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இலை மடிச்சுக்கட்டி நோயின் தாக்கத்தை அவதானித்திருக்கிருக்கிறோம். நெல் இலைகள் பச்சையம் அற்று இலைசுருண்ட நிலையில் காணப்பட்டு அதனுள் புழு காணப்படும். அந்தப் புழுவானது இலைகளை மடித்து அதனுள் சுமார் 300 வரையான முட்டைகள் இட்டு 3-5 நாட்களில் புழு வெளியேறும். அந்த புழுவானது இலைகளைச் சுருட்டி 16 நாட்கள் வரை உயிர்வாழும். மஞ்சள், பச்சை நிறம் கலந்த புழுவாக காணப்படும். விவசாயிகள் வயல்களில் நைதரசன் உரப்பாவனையைக் குறைக்க வேண்டும். சிபாரிசு செய்யப்பட்ட இரசாயனங்களை பயன்படுத்த வேண்டும்.
மேலும் விவசாய போதனாசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி பொருத்தமான கிருமி நாசினியை விசுறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.