தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குழு இன்று(26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலவாக்கலையில் உள்ள லிந்துலை நகர சபைக்கு சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்தில் 2020 ஆம் ஆண்டு பிரதேச செயலகம் நிறுவப்பட்டது. மேற்படி பிரதேச செயலகத்தின் கீழ், தலவாக்கலையிலுள்ள லிந்துலை நகர சபைப் பகுதி, திம்புல பிரதேச சபையிலுள்ள கோரலேயப் பகுதி மற்றும் கொட்டக்கலையிலுள்ள அகரபத்தனை பிரதேச சபைப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் குடியிருப்பாளர்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் போராட்டத்தை தொழிற்சங்க கூட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்தது. அதன் உறுப்பினர் தம்மிக்க முனுசிங்க, இந்தப் பிரதேச செயலகத்தில் சுமார் 150 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிவதாகவும், பிரதேச செயலகத்தில் உள்ள இடம் அதற்குப் போதுமானதாக இல்லை என்றும் கூறினார். அதேபோல், பிரதேச செயலகத்தில் பௌதீக வளங்கள் இல்லாததால், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு திறமையான சேவையை வழங்க முடியவில்லை என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பொறுப்பான அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கப்படவில்லை.
பிரதேச செயலகத்திற்கு அருகில் இருந்து தொடங்கிய போராட்டம் தலவாக்கலை பிரதான நகரை சுற்றி வந்தனர் இதன் காரணமாக , ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஏற்பட்ட மறியல் காரணமாக தலவாக்கலை காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக எமது விசாரணைக்கு பதிலளிக்கும் விதமாக, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நுவரெலியா மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான திரு. மஞ்சுள சுரவீரராச்சி, கோரிக்கைகளைப் பெறுவதற்கு தொழிற்சங்கங்களுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு என்றும், தலவாக்கலை பிரதேச செயலகத்தில் போதுமான இடமின்மை மற்றும் பௌதீக வளங்கள் இல்லாமை குறித்து நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவில் விவாதிக்கப்பட்டதாகவும், அதற்கான தீர்வுகளை வழங்குவதில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.