நூல் :- நான் இந்து அல்ல, நீங்கள்
எழுத்தாளர் :- தொ. பரமசிவம்
விலை :- ரூபா. 50
உலகமயமாக்கல் என்ற பேரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய மக்களின் வாழ்க்கை துவண்டு போய்க் கிடக்கின்றது. இந்த நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மற்றொரு பக்கத்தில் இந்து அடிப்படைவாதிகள் ஆரவார கூச்சல் இடுகிறார்கள். ‘இந்து ‘ என்ற சொல்லும் அதனடிப்படையும் வெகு மக்களுக்கு எதிரானவை, ஆனால் படித்த நகரப்புறம் சார்ந்த வறுமைக்கோட்டினை அடுத்து இருக்கின்ற மக்கள் ‘இந்து’ என்ற சொல்லில் ஏமாந்து போகிறார்கள்.
கிறித்தவர் என்பது போல இசுலாமியர் என்பது போல ‘இந்து’ என்பதும் ஒரு அடையாளம் என்று நினைக்கின்றனர். ஆனால் பெருவாரியானா மக்களுக்கு சாதி என்னும் கொடுமையான அடையாளம் தான் உண்மையானதாக இருந்து வந்திருக்கிறது. மத அடையாளம் எல்லாம் மேல் சாதிகளுக்குத்தான். இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களை நோக்கியே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன.
எதனையும் கற்று அறிகின்ற மனநிலையில் உலகம் இல்லை. வாழ்கை எனும் நீரோட்டத்தில் எப்படியாவது மிதந்து செல்லலாம். செல்கின்ற வழியில் பணம் மட்டும் வாழ்வுக்கு போதுமானது என்ற எண்ணம் மட்டுமே அதிகமான உலக மக்களிடம் குடியிருப்பு அமைத்து வாழ்கிறது. தமிழர்கள் என்றும் ஆதி முதல் இன்று வரை தனி கலாசாரம், பண்பாடு, வாழ்வியல், நெறிமுறைகள் உடையவர்களாகவே வாழ்கிறார்கள்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடியான தமிழர்களுக்கு என்று ஒரு வணக்க முறை இருக்கிறது. அது சைவ சமய நெறிமுறையான வணக்க முறையாகும். ஆனால் சில அந்நிய இனத்தவர்களின் தந்திரோபாயங்களாலும் சில அரசியல் சுயநலமிகளாலும் திட்டமிட்டு இன்று தமிழர்கள் இந்து சமயத்தவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள்.
ஐயா தொ. பரமசிவம் கூறுகையில்
“கிறுஸ்துவரல்லாத இஸ்லாமியரல்லாத பார்சி அல்லாத மக்கள் அனைவரும் இந்துக்கள் “
இவ்வாறான கூற்று ஆங்கிலேயர் ஆட்சியில் வெள்ளையர்கள் மக்கள் கணக்கெடுப்புக்காக பயன்படுத்தி அவர்கள் தேவைகளை செய்தார்கள். அதை ஆரியர்கள் தம் கைவசம் இழுத்து இன்றும் தமிழர்களை ஒரு கூண்டுக்குள் சுருக்கி விட்டார்கள். இதனை தமிழர்கள் நம்பினோம். இந்துவானோம். ஐயா தொ. பரமசிவம் அவர்களின் நான் இந்து அல்ல நீங்கள் என்ற நூலை தமிழர்கள் அனைவரும் கற்று தெளிய வேண்டும்.
எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா –

