யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (21) வடமாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அவர் கருத்துத் தெரிவிக்கும் போது,
யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளில் கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது என நாம் குரல் கொடுத்து வரும் நிலையில் 310 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடலட்டை பிடிப்பதற்காக 310 படகுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளது.
ஊழலற்ற கட்சி, அரசு எனக் கூறிக் கொண்டு வந்த NPP எப்படி 310 படகுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் எப்படி 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளது.
அனுமதிக்கு மேலாக 300 படகுகளுக்கும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள தொழில்களுக்கு இலஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதியளிக்கும் அமைச்சு. கடல், மீன்பிடி பற்றி தெரியாத ஒருவர் அமைச்சராக இருந்து கொண்டு கடற்றொழில் பற்றி பேசுவது கிடையாது.
நாடாளுமன்றில் நேற்று விவசாயம், குளங்கள், வீதிகள் பற்றி பேசும் அமைச்சர் கடற்றொழில் பற்றி பேசவே இல்லை.
உள்ளூராட்சி சபைகளை ஆட்சி செய்வதில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும். இனிமேலும் ஒன்று சேராமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாள முடியாது. இதனை தமிழ்க் கட்சிகள் உணர்ந்து மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாது விடின் எதிர்காலத்தில் மக்கள் இவ்வாறான கட்சிகளை நிராகரிக்க வேண்டும்.
தனித்து நிற்கும் கட்சிகளுக்கோ அல்லது அரசியல் வாதிகளுக்கோ வெளிநாட்டில் இருந்து எமது உறவுகள் பணம் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு பணம் அனுப்புவதை நிறுத்தினாலே இங்குள்ளவர்களை வழிக்கு கொண்டுவர முடியும்.
அரசு காணி சுவீகரிப்பு தொடர்பில் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது. 5985 ஏக்கர் காணிகளில் 3500 ஏக்கர் வரையான காணி வடமராட்சி கிழக்கில் காணப்படுகிறது. இக் காணிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து, கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பூர்வீகக் காணிகள் இவை.
யுத்தம் காரணமாக வேறு காரணங்களால் மக்கள் குறித்த பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். பலர் வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் இக் காணிகளை அரசுடமையாக்க அரசு முனைவதை நாம் எதிர்க்கிறோம் என நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.