காஸாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து இஸ்ரேலுடனான வர்த்தக உறவு குறித்து மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட இராஜதந்திரி கஜா கலாஸ் இதனை தெரிவித்துள்ளார்.
பிரசல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் இந்த சந்திப்பில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டார்கள் என தெரிவித்துள்ளார்.
காஸாவில் காணப்படும் நிலைமை தாங்க முடியாதது என ஐரோப்பிய நாடுகள் கருதுவதையே இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகள் குறித்து மீள்பரிசீலனை செய்யும் தீர்மானம் தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட இராஜதந்திரி கஜா கலாஸ் நாங்கள் மக்களிற்கு உதவ விரும்புகின்றோம். மனிதாபிமான உதவிகள் மக்களிற்கு சென்றடைவதை உறுதி செய்ய விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன பகுதிகளில் பேரழிவு நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இஸ்ரேல் அனுமதித்துள்ள உதவிகளை வரவேற்கின்றோம். ஆனால் ஆனால் இது சமுத்திரத்தின் சிறுதுளியே.எந்த தடையுமின்றி மனிதாபிமான உதவிகள் செல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.