எதிர்க்கட்சிகள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டாக இணைந்து ஆட்சியமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதுவரையில் இலங்கை தமிழரசுக் கட்சியிடம் எந்த பேச்சுவார்த்தையும் யாரும் நடத்தவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுப் பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா. சிறிநேசன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கூடும் போது அவ்வாறான முடிவினை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனாலும் எதிர்க்கட்சியென்றாலும் தமிழ்த் தேசியம் சார்ந்த சில விடயங்கள், எங்களது கொள்கைகள், எங்களுடன் இணைந்து செல்லும் தன்மை என்பவற்றினைக் கொண்டே எங்களுடன் கூட்டிணைந்து சபைகளை அமைக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் ஏற்பாட்;டில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டவான் மற்றும் செங்கலடியில் அமைக்கப்படவுள்ள 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தலைவர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஞா.சிறிநேசன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் வட அமெரிக்கா தமிழ் சங்கத்தின் உறுப்பினர் சிவம் வேலுப்பிள்ளை, கனடா விபுலானந்தர் கலைமன்றத்தின் தலைவர் வல். கந்தையா புருஷோத்தமன், சமூக செயற்பாட்டாளர் வி. விஜயராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மிகவும் வறிய நிலையில் தகர கொட்டில்களில் வாழும் குடும்பங்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம், கனடா அமைப்பானது கடந்த 12 வருடமாக வடகிழக்கில் பல்வேறு சமூக நல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சஜித் பிரேமதாசவினால் வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அது கைவிடப்பட்டுள்ள நிலையில் தான் ஜனாதிபதியாக வந்தபின் வீட்டுத்திட்டத்தினை பூர்த்திசெய்வேன் என சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் நான் வலியுறுத்திக் கூறியதன் பின்னர் இந்த வரவு செலவு திட்டத்தில் 85 கோடி ரூபா ஒதுக்கியுள்ளனர். கட்டி பூர்த்தி அடையாத வீடுகளை பூர்த்தி செய்வதற்கு முதற் கட்டமாக ஒதுக்கியிருக்கின்றார்கள். அதனை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆளும் கட்சி தேசிய மக்கள் சக்தியாக இருக்கும் போது எதிர்க்கட்சிகள் கூட்டாக ஒரு முடிவை எடுத்துள்ளதாக பேசப்படுகின்றது. ஆனால் எமக்கு அப்படியான கருத்துக்கள் இதுவரை எட்டவில்லை நான் நினைக்கின்றேன். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கூடும் போது அப்படியான முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.
கொள்கை,தேசியம் சம்பந்தமான விடயங்கள் , எங்களோடு ஒத்துப் போகின்ற தன்மை இவற்றைப் பார்த்து ஒரு நாம் ஒரு சபைக்கு உதவி செய்தால் மற்றவர்களும் நமக்கு உதவி செய்யும் சந்தர்ப்பத்தில் நாம் அவர்களோடு இணைந்து நட்பாக சபைகளை அமைக்கும் வாய்ப்புள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையை பொருத்தமட்டில் 80 வீதமான வட்டாரங்களை நாம் வெற்றி பெற்றுள்ளோம். 20 க்கு 16 வட்டாரங்கள் எமக்கு கிடைத்திருந்தாலும் பிரதிநிதித்துவத்தில் காணப்படும் சிக்கல் காரணமாக இங்கு இரண்டு ஆசனம் தேவைப்படுகின்றது. அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகின்றோம். அதன்போது முழு மனதோடு உதவி செய்வதாக ஒருவர் சொல்லியிருந்தார். அதேபோன்று எமக்கு டெலிபோன் சின்னம், பந்து சின்னம் உதவி செய்ய வாய்ப்புள்ளது. அறுதி பெரும்பான்மையுடன் மாநகர சபையை நாம் ஆட்சி அமைப்போம்.



