காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவை முடிந்தவரை துண்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஐ.சி.சி. நடத்தும் பெரிய போட்டிகளில் கூட லீக் சுற்றில் பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்கும் வகையில் அட்டவணையை உருவாக்கும்படி வலியுறுத்தியது.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து இந்தியா விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வளரும் அணிகளுக்கான (பெண்கள்) ஆசிய கோப்பை போட்டி அடுத்த மாதம் இலங்கையில் நடக்கிறது. பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொசின் நவ்வி, அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கிறார். இதனால் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ஆசிய போட்டியை இந்தியா புறக்கணிக்க இருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா கூறுகையில், ‘இரண்டு ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்பதில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் இன்று (நேற்று) காலை எங்களது கவனத்துக்கு வந்தது.
இப்போதைக்கு அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. ஆசிய கோப்பை போட்டி குறித்து நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை. இப்போதைக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதிலேயே முழு கவனமும் இருக்கிறது. ஆசிய கோப்பை குறித்து எந்த மட்டத்திலும் ஆலோசிக்கப்படவில்லை. இந்த செய்திகள் எல்லாம் யூகம் மற்றும் கற்பனையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது’ என்றார்.