வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் முறையற்ற வகையில் அதிபர் நியமனம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளையினர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு நேற்றைய தினத்திலிருந்து புதியவர் ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தில் பல்வேறு பொருத்தமற்ற செயற்பாடுகள் அரங்கேறியுள்ளன.
குறிப்பாக நேர்முகத்தேர்வு இன்றி வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபார்சின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதிபர் தெரிவிற்காக ஏற்கனவே இரண்டு நேர்முகத் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அது தொடர்பான எந்தவிதமான வெளிப்படுத்தல்களும் இன்றி இந்த நியமனம் புதிதாக வழங்கப்பட்டுள்ளமை முறைகேடான ஒரு விடயமாகவே எம்மால் பார்க்கமுடிகின்றது.
1C பாடசாலைகள், மற்றும் வகை iii பாடசாலைகளுக்கு அதிபர் நியமனத்தின் போது நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்ட நியமனங்கள் வழங்கபட்டுவரும் நிலையில் 1AB பாடசாலைக்கு நேர்முகத் தேர்வை நடாத்தாமல் நியமனம் வழங்கப்பட்டமை முறையற்ற செயற்பாடாகும்.
முதற் தடவையாக நடைபெற்ற நேர்முகத் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இரண்டாம் முறை நேர்முகத் தேர்விற்கான விண்ணப்பம் கோரி அதனையும் இழுத்தடித்தமையானது குறித்த அதிபரை நியமனம் செய்வதற்கான உள்நோக்கத்தை கொண்டிருந்தா என எமக்கு சந்தேகம் எழுகின்றது.
அத்துடன் வலயக்கல்விப் பணிப்பாளரின் தனிப்பட்ட சிபார்சினை மட்டும் அடிப்படையாகக்கொண்டு கல்விச் செயலாளரினால் நியமனம் வழங்கப்பட்டமையானது வலயக்கல்வி பணிப்பாளரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடமளிக்கும் நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய பிரதமர் அண்மையில் வவுனியாவில் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போது பாடசாலைகளுக்கான அதிபர் நியமனங்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தமையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். என்று குறித்த அறிக்கையில் உள்ளது.