வடமராட்சி வடக்கை கைவிட்டதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மீது வடமராட்சி வடக்கு மக்கள் தமது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளனர்.
இது சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஆறாம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபைக்காக சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பன்னிரண்டு வட்டாரத்திலும் போட்டியிட்டிருந்தது. இதில் ஒரு வட்டாரத்தில் வெற்றி பெற்ற நிலையில் மேலதிக ஆசனங்களாக மூன்று கிடைத்தது. மொத்தமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு நான்கு ஆசனம் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஆசனப் பிரிப்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கிடைத்த மேலதிக மூன்று ஆசனங்கள் உட்பட்ட நான்கு ஆசனங்களும் வடமராட்சி கிழக்குக்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வடமராட்சி வடக்கு மக்கள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மீது கடும் கோவத்தினையும் விசனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரதேச சபைத் தேர்தலில் வடமராட்சி வடக்கு பகுதியில் மொத்தம் ஏழு வட்டாரங்களும் வடமராட்சி கிழக்கில் ஐந்து வட்டாரங்களும் இணைந்தே பன்னிரண்டு வட்டாரம் ஆகும். இதில் கிடைத்த மேலதிக ஆசனத்தில் ஒன்றையாவது தமக்கு தந்திருந்தால் வடமராட்சி வடக்கு பிரதேச வளர்ச்சியில் முன்னேற்றக் கூடியவாறு இருந்து இருக்கும் என கூறுகின்றனர்.
மற்றும் ஆசனப்பிரிப்பில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அவர்கள் நாகர்கோவில் வட்டாரத்தில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்ற பெண்ணுக்கு மேலதிக ஆசனம் கொடுத்துள்ளது பெரும் விமர்சையை ஏற்படுத்தி உள்ளது.