திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று அவ்வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தினை அவசரமாக திறத்தல், புதிதாக குருதி சுத்திகரிப்பு (dialysis unit) பிரிவொன்றினை திறத்தல், இயன் மருத்துவப் பிரிவிற்கு தேவையான உபகரணங்களை வழங்கி அதனை திறன்பட இயங்கச் செய்தல் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பாகவும் இக்கூட்டத்தின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிராந்திய பணிப்பாளர் வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்டார்.




