திருகோணமலை சிவன்கோயிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி இன்று (17) மாலை வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வை திருகோணமலை மாவட்ட வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகள் சங்கம், மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான வலையொலியாக மாறியுள்ளன.
இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில், காணாமற்போனோரின் உறவுகள், சமூகச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றி பேசினர். நிகழ்வு, சமூக நினைவாற்றலை பாதுகாத்து, இனநீக்கம், உயிரிழப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் எதிர்வினையாகவும் அமைந்தது.
மே மாதம் 12 தொடக்கம் 18 வரை முள்ளி வாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் வடகிழக்கில் உள்ள தமிழர் தாயகங்களில் நாளைய தினம் (18) விசேடமாக இடம் பெறவுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த காணாமல் போன உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்டியன் தேவி, “மே மாதம் தொடங்கி விட்டால் நாங்கள் மறக்க, மன்னிக்க முடியாத இன அழிப்பை நினைவு கூறுகிறோம். 2009 இல் உயிர் நீத்த உறவுகளுக்காக நினைவு கூறுகிறோம். கடந்த 16 வருடங்களாக போராடுகிறோம். ஒரு மாதம் தொடக்கம் 16 வயது வரை சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், யுத்த களத்தில் பட்டினிச் சாவை அடைந்தார்கள். இலங்கை அரசாங்கம் கஞ்சியை குடிக்காத அளவுக்கு இரானுவம் தாக்கினார்கள். இதற்கான நீதியை வேண்டியே போராடுகிறோம். அவர்களுக்காக குரல் கொடுக்கிறோம்” என்றார்.


