மறவோம் முள்ளிவாய்க்காலை…
(இது ஒரு இனத்தின் குரல்…)
பதினைந்து வருடங்கள் உருண்டோடி விட்டது. ஆனாலும் கூட இன்றும் மறவாத வடுவாய் மனமெங்கும் வியாபித்திருக்கின்றது முள்ளிவாய்க்காலின் நினைவலைகள். நீதிக்கோரிய போராட்டத்தின் எஞ்சிய எச்சங்கள் தான் இன்று முள்ளிவாய்க்காலில் நினை
வேந்தலுக்காக நீதிவேண்டி நிற்கின்றன என சொல்லும் போதே மனம் கணக்கின்றது. எங்கும் அவலகுரலும், மரணஓலங்களும் கணீர் என காதுகளை கிழித்தது. பீறியடித்த இரத்தம் மூச்சுப்பிடித்து உயிர் காக்க ஓடிய எஞ்சிய மனித தசைகளிலும், மண்ணிலும் காய்ந்து வறண்டு போயிருந்தது. உயிரைக் காக்க தன் மானத்தை இழந்தும் கரைகடக்க
துணிந்தது மனம் பதறியழுத பச்சிளம் குழந்தைகள் முகம்கண்டு.
என்ன பயன்? காத்துவந்த உயிரையும், கணத்துபோயிருந்த மனங்களையும் கொத்துக் குண்டுகள் கொத்துக்கொத்தாக காவுகொண்டது. பார்க்கும் இடமெங்கும் பிணக்குவியல்களும், உருக்குலைந்த உடல்அவயங்களும், பீரங்கிப்புகைகளும், நச்சுமருந்து நாற்றமும் தான். மனம் சோர்வடைந்து, கால்கள் வலுவிழந்து, உடல்அவயம் சிதறி, நெஞ்சில் திராணியற்று வெள்ளைக்கொடி ஏந்தியவர்கள் மீது கூட தயக்கம் இன்றி பாய்ந்த தோட்டாக்கள் சில்லடையாக்கியது என் சிறுபான்மை இனத்தை, ஆட்லறி சத்தமும். ஆயுதப் போராட்டமும் இன்றும் மனங்களில் மாறாத வடுவாய்தான் இருக்கின்றது.
அறிந்தோம். எமக்கான விடியலும் வீர மண்ணுக்காய் வீழ்ந்து விட்டதென. இனியும் எமக்கு போக்கிடம் கிடையாது நிர்க்கதியாய் நிற்க வேண்டாம் என நினைத்து பல எஞ்சிய உயிர்கள் சரணடையவென எண்ணி. இதுதான் இறுதி கணம் எனஅறியாது முள்ளிவாய்க்காலின் அருகே வந்தடைந்தார்கள். சொற்ப நேரத்தில் காற்றோடு கலந்த புகையாகியது என் இனம். முள்ளிவாய்க்கால் குருதி வாய்க்காலாக மாறியது. உறவுகளை இழந்தும், உடைமைகளை இழந்தும், உடல் அவயங்களை இழந்தும், இதற்கும் மேலாக உயிரிலும் மேலான மானத்தையும் இழந்தும் இன்றும் மாண்டவர் நீதிக்காய் ஆண்டவனிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் இனம் நாங்கள்.
வருடங்கள் மாறாலாம். வரும் ஆட்சிகளும் மாறலாம் என்றும் மாறாதது எம் மனங்களில் நிறைந்திருக்கும் எம்மவர்களின் இறுதிக்குரல், தாய் நாட்டுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் உயிரை துச்சமென எண்ணி மாண்டுபோன மாவீரர் வாழ்ந்துவீழ்ந்த அதே மண்ணில் இன்று நடக்கும் மறியாட்டங்கள் அனைத்தும் மனக்கவலைகளை தூண்டுகின்ற போதிலும், இறுதிக்கணம் வரை போராடிய என் ஈழமண்ணின் மைந்தர்களுக்காகவும் எம் கண்ணின் முன் நடந்தேறிய கொடிய துர்ச்சம்பவங்களுக்கும் நீதி கிடைக்கும் வரை யாவற்றையும் கடத்தி செல்வோம் எம் அடுத்த தலைமுறைக்கு.
ஒவ்வொரு ஆண்டும் கஞ்சி கொடுத்தும், தீச்சுடர் ஏற்றியும் நாங்கள் வெளிக்காட்டுவது வெறுமனே எங்கள் வலிகளை மட்டுமல்ல, நீதிக்காய் இன்னமும் காத்திருக்கும் எம் இனத்தின் அடையாளங்கள் நாங்கள் என்பதையே. பதினைந்து வருடம் என் இனத்தின் அழிவை அழிவென்றே கூற மறுக்கும் இலங்கை அரசும், ஏறெடுத்தும் பாராத உலக நாடுகளும் என் இனத்தின் விடியலையும் தன் கட்டப்பட்ட கண்களில் மறைத்து வைத்திருக்கும் நீதி தேவதையின் கண்களும் அடுத்த ஆண்டிலாவது என் இனத்தின் மீது கரிசணை காட்டட்டும்.
“இது ஒரு இனத்தின் குரல்.”