நூல் :- ஆகாயத்துக்கு அடுத்த வீடு
எழுத்தாளர் :- மு. மேத்தா
விலை :-800 ரூபாய்
சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிதை நூலை கைகளில் ஏந்தினேன். நூலின் முதல் பக்கம் புரட்டும் போது முதல் பதிப்பு 2004ஆம் ஆண்டு செய்யப்பட்டாலும் 2021ஆம் ஆண்டு வரை பத்து தடவைகளுக்கு மேல் மீள் பதிப்பும் செய்யப்பட்டே வந்துள்ளது. மு.மேத்தா அவர்களின் கவிதைகள் காலம் கடந்தும் தனி மரமாய் நிற்கும் ஆற்றல் கொண்டது.
மேத்தாவின் கவிதைகள் ரசனைகளில் மிதம் மிஞ்சி எம்மை உள்ளீர்க்க கூடியது. சமூக அவலங்கள் அவரது கண்களை உலுக்கி கைகளை எழுதவும் வைத்துள்ளது. கவிதை நூலினுடைய தலைப்பு வேறு ஒரு கோணத்தில் பார்க்கவும் என்றும் சொல்லித் தருகிறது. மேத்தாவின் வரிகளில் மூழ்கி கிடப்பதும் முழுமையான மன நிம்மதியைத் தருகிறது. தமிழை தமிழால் வாழ்த்தி வாழ வைக்கிறார் கவிஞர் மேத்தா.
வழுவமைதி எனும் தலைப்பில்
“வசதி உள்ளவர்
வழுக்கி விழுந்தால்
குளியல் அறை என்று
கூறுக.
பஞ்சை பராரிகள்
வழுக்கி விழுந்தால்…
படுக்கை அறை என்று
பகர்க “
வாழ்க்கை என்பது… எனும் தலைப்பில்
“பெட்டி படுக்கைகளைச்
சுமந்தபடி
ஒரு
பிராயணம்
எப்போது சுமைகளை
இறக்கி வைக்கிறோமோ
அப்போது
சுற்றியிருப்பவர்கள்
நம்மைச்
சுமக்கத்
தொடங்குகிறார்கள்….”
வரலாறு எனும் தலைப்பில்
“அடையாளங்களையெல்லாம்
அழித்து விடுகிறார்கள்!
எப்படி அறிந்து கொள்வது…
கொலைகாரர் குரலையும்
குயில்களின் இசையையும்?”
குடியரசு தினம் எனும் தலைப்பில்
“ஆளுநர் மாளிகையில்
விருந்து
அனைத்துக் கட்சித்
தலைவர்களுக்கும்!
பரிமாறிக் கொண்டிருந்த
பணியாளர்கள் தமக்குள்
பேசிக் கொண்டனர்
யார்
யாரைச்
சாப்பிடப் போகிறார்களோ?”
கொம்பு எனும் தலைப்பில்
“முளைத்துவிடுகிறது
மாடுகளைப் போல்
தலையாட்டும்
மனிதர்களுக்கும்!”
ஈராக் – 2003 எனும் தலைப்பில்
“ஈராக் அழிந்து
சிதைந்த பிறகுதான்
தெரிந்தது
பேரழிவு ஆயுதங்கள்
எவர் கையில்
இருந்ததென்பது “
தீண்டாமை எனும் தலைப்பில்
“கறுத்தநிறப் பாம்பொன்று
மேனி கொஞ்சம்
கலை எழிலாய்ச் சிவந்தநிறப்
பாம்பு ஒன்று
பொறுத்திருந்தே அறைக்குள்ளே
நுழைந்து சுற்றிப்
புறம்பார்த்தும் அகம்பார்த்தும்
புன்ன கைக்கும் “
வெற்றித் தூண் எனும் தலைப்பில்
“மகளிர் கூட்டம்
வரவேற்பளித்தது
மலர்களைத் தூவி
எதிரி நாட்டுப் பெண்களை
விதவைகளாக்கி வந்த
வீரர்களுக்கு “
கவிதையின் ஆழத்திற்க்கு வாசகர்களை அடித்து இழுத்துச் செல்வதாகவே ஆகாயத்துக்கு அடுத்த வீடு நூலைப் பார்க்கிறேன்.
எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா –

