முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி.பாம் கிராம மக்களை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அவ்வாறு குடியேற்றத் தவறினால் குறித்த பகுதியில் மக்களோடு இறங்கி துப்பரவு செய்து ஏ.சி.பாம் கிராம மக்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.
இன்று (15) முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்படாத பூர்வீகத் தமிழ் கிராமங்களான ஏ.சி.பாம், தண்ணிமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் களவிஜயம் மேற்கொண்டிருந்தார். அத்தோடு வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீமன்கமம் பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களையும் இதன்போது அவர் பார்வையிட்டிருந்ததுடன், அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களோடும் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தண்டுவான் கிராமத்திற்கு அண்மையிலுள்ள ஏ.சி பாம் என்னும் பூர்வீகத் தமிழ் கிராம் இதுவரையில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதிமக்களின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டு குறித்த ஏ.சி.பாம் கிராம மக்களின் நிலமைகள் குறித்து ஆராய்ந்துள்ளேன்.
அந்தவகையில் அசாதாரண நிலமை காரணமாக கடந்த 1997 ஆம் ஆண்டு அப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த சுமார் 46 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது வாழிடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் தற்போது வரை குறித்த ஏ.சிபாம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
இருப்பினும் குறித்த கிராமத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் சிதைவடைந்த நிலையில் மக்கள் வாழ்ந்த வீடுகள் காணப்படுவதுடன், வேலிகளுக்காக நடப்பட்ட சீமைக்கிழுவை மரங்களும், மாமரம், தோடை உள்ளிட்ட பலன்தரும் மரங்கள் பலவும் காணப்படுகின்றன.
இத்தகைய சூழலில் கடந்த 2012 ஆம் ஆண்டு குறித்த ஏ.சி பாம் கிராமம் தண்டுவான் ஒதுக்கக்காட்டுப்பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வனவளத்திணைக்களம் குறித்த பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 1979 ஆம் ஆண்டு நிலஅளவைத் திணைக்களத்தால், குறித்த பகுதி அளவீடு செய்யப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நிலஅளவைத் திணைக்களத்தால் அளவீடு செய்யப்பட்டமைக்கான Top of PP66 என்னும் இலக்க வரைபடம் எம்மிடமுள்ளது. குறித்த காணிகள் தமிழ் மக்களுடையவை என்பதற்கு ஆதாரமாக, 1979 ஆம் ஆண்டு நிலஅளவை செய்யப்பட்ட வரைபடம் இருக்கும்போது, இப்பகுதி தண்டுவான் ஒதுக்கக்காடு என எவ்வாறு வர்த்தமானி வெளியிடமுடியும்.
ஏற்கனவே நீண்டகாலத்திற்கு முன்னர் நிலஅளவைத் திணைக்களத்தால் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் உள்ள இடத்தை, இவ்வாறு ஒதுக்கக்காடு என்று வர்த்தமானி வெளியிடுவது சட்டமீறல் செயற்பாடாகும். தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்கள் இவ்வாறுதான் அபகரிப்புச் செய்யப்படுகின்றன. இந்நிலையில் தங்களுடைய பூர்வீக வாழிடத்தில் மீள்குடியேற்றுமாறு இக்கிராமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த மக்களை அவர்களது சொந்த இடமான ஏ.சி பாம் கிராமத்தில் மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியாக உரியவர்களை கேட்டுக் கொண்டு மாத்திரம் இருக்க முடியாது. இந்த இடங்களில் நாம் மக்களோடு இறங்கி, மக்களுடைய இடங்களைத் துப்பரவு செய்து, மக்களைக் குடியேற்றவேண்டிய நிலை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மக்களுடைய காணிகள் மக்களிடமே சேரவேண்டும். இவ்வாறு வனவளத்திணைக்களமோ அல்லது ஏனைய அரச திணைக்களங்களோ மக்களின் காணிகளை அபகரிக்கும் சட்டமீறல் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இதேபோல் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாமல் காணப்படுகின்றது. அப்பகுதி மக்களும் தமது பகுதிகளையும் மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்படாமலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக இடங்களை இந்த அரசாங்கம் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது தொடர்பிலே நாடாளுமன்றிலும் பேசுவதுடன், ஜனாதிபதி, பிரதமர், உரிய அமைச்சுக்களின் கவனத்திற்கும் கொண்டு வந்து இவ்வாறு மீள்குடியேற்றப்படாமலுள்ள பகுதிகளை மீள்குடியேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
அத்தோடு வீமன் கமம் பகுதியில் வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10 பேருக்குரிய 20 ஏக்கர் விவசாயக் காணிகளையும் விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்” என்றார்.



