வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் போனஸ் ஆசனம் யாருக்கு என பங்காளிக் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறிப்பாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 3 ஆசனங்கள் கிடைத்த நிலையில், ஒரு போனஸ் ஆசனம் பெண் ஒருவரை நியமிப்பதற்கு கிடைத்திருந்தது. குறித்த முதலாவது போனஸ் ஆசனம் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவிற்கு என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தற்போது மாநகரசபையின் போனஸ் ஆசனத்தை தமக்கு தருமாறு புளொட் கோரியுள்ளது. மாநகரசபையில் வட்டாரம் வென்ற புளொட் 2 உறுப்பினர்களையும், ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு ஆசனத்தையும் கொண்டுள்ள நிலையில் தற்போதைய போனஸ் ஆசனத்தையும் புளொட் கோரியுள்ளது என ரெலோ தெரிவித்துள்ளது.
அதற்கு ரெலோ மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் புளொட் அமைப்பாக இருப்பதால் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இதனால் ரெலோ தரப்பு குழப்ப நிலையில் உள்ளதாகவும், விரைவில் கூடி கதைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, குறித்த கூட்டணிக்குள் மேயர் தெரிவு மற்றும் போனஸ் ஆசனம் தொடர்பில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.