இன்றைய தினம் (14.05.2025) ஆணையிறவு உப்பளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டபோராட்டத்தை அடுத்து இன்று மாலை 3.00 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள் உப்பளத்தின் முகாமையாளருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ஆனையிரவு உப்பளமானது இதுவரையில் உப்பு உற்பத்தினை முழுமையாக உற்பத்தி செய்யப்படவில்லை எனவும் தற்பொழுது உப்பு உற்பத்தி செய்யும் இயந்திரம் பழுதடைந்து காணப்படுவதன் காரணமாக இதற்கான உதிரிப் பாகங்களை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு தற்பொழுது கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும், ஓரிரு தினங்களில் உப்பளத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் செயல்பட ஆரம்பித்த பின்னர் நியாயமான விலையில் ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உப்பளத்தின் உப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் போராட்டமானது நியாயமானது. அவர்களுக்கான அடிப்படை உரிமை. உப்பு உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் படிப்படியாக பணியாளர்களுக்கான அனைத்து நன்மைகளும், வரப்பிரசாதங்களும் பெற்றுக் கொடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
