தெட்சணகைலாயம் என்னும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் ஆலய பிரமோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா புத்தாண்டு நாளான திங்கட்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான திருகோணேஸ்வரப் பெருமானின் நான்காம் நாள் திருவிழாவானது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஒழுங்கமைப்பில் பகல் வேளையும், இரவு வேளையும் நடாத்தப்பட்டது.
இதன்போது காலை அபிஷேகம், பிற்பகல் அபிஷேகம், மூலஸ்தான பூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை இடம்பெற்று சுவாமி வீதியுலா வந்தனர்.
மாலை உற்சவங்களின் பின் ஆலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் இசை நடனக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் நாள் (11ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து 16 நாட்கள் திருவிழா இடம்பெற்று எதிர்வரும் 27.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு இரதோற்சவத் திருவிழாவும், 28.04.2025 திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.




