எதிர்வரும் வைகாசி விசாக பெளர்ணமி தினத்தில் சிவனடி பாத மலை பருவகாலம் நிறைவுக்கு வருகிறது.
அதற்கான குழுக் கூட்டம் இன்று சிவனடி பாத மலைக்கு பொறுப்பான பௌத்த மத தேரர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் நல்லதண்ணி கிராம உத்தியோகத்தர் கேட்போர் கூடத்தில் இன்று 8 ம் திகதி மதியம் 2 மணிக்கு இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் மற்றும் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர்கள் இப் பகுதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள், மின்சார சபையினர், தேசிய நீர் வடிகால் திணைக்களம் அதிகாரிகள், அரச பேருந்து, தனியார் பேருந்து, ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரிகள், லக்சபான இராணுவ முகாம் அதிகாரி உட்பட நல்லதண்ணி நகர வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
வைகாசி விசாக பௌர்ணமி நாளில் முடிவுக்கு வரும் பருவ கால அன்றைய நாளில் சுவாமிகள் இரத்தினபுரி பலாபத்பள வழியாகவும், நல்லதண்ணி நோட்டன் பிரிட்ஜ் வழியாகவும், பொகவந்தலாவ வழியாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுவாமிகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் லக்சபான இராணுவ முகாம் சிப்பாய்களால் மலை உச்சியில் இருந்து மிகவும் பாதுகாப்பான முறையில் பல்லக்கில் வைத்து நல்லதண்ணி நகருக்கு கொண்டு வரப்பட்டு வாகனங்கள் மூலம் இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜ மஹா விகாரைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.