திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பகுதியில் உள்ள சம்பூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (04) திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுநர் செயலகம் முன்பாக இடம்பெற்றது.
சம்பூரில் அமையவுள்ள சூரிய மின் சக்தி நிலையம், விதுர கடற்படை முகாமிற்காக அபகரிக்கப்பட்ட காணிகள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரியே போராட்டம் இடம் பெற்றுள்ளது.
இதனை திருகோணமலை நில மீட்புக்கான வலையமைப்பினர் ஏற்பாடு செய்தனர்.
பறிக்காதே பறிக்காதே வாழ்வாதார நிலங்களை பறிக்காதே, உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்த எமது நிலத்தை எமக்கு வழங்கு போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆளுநரின் செயலகத்தில் உள்ள அலுவலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சம்பூரில் அமையவுள்ள சூரிய மின் சக்தி நிலையம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு வருகை தரவுள்ள நிலையில் இந்த கவனயீர்பு இடம் பெற்றுள்ளதுடன் குறித்த திட்டம் தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.



