அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு நேர்காணல் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இனப் பிரச்சினையை சர்வதேசத்தால் தீர்க்க முடியாது என்றும் உள்ளகப் பொறிமுறை மூலம் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் சர்வதேச விசாரணை தேவையில்லை அதே நேரம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர வேண்டும் என்றும் அதிகாரங்கள் இழந்த நிலையில் வெளிப்படுத்தியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கும் இனப் படு கொலை நடைபெறாது தடுப்பதற்கும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று வருவதற்கான சூழலையும் பலவீனப்படுத்தி தடுத்து நிறுத்திய கடந்தகால வரலாற்றை மறந்தவர் போல் பித்தலாட்டம் போடுகிறார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2000 ஆண்டு இனப் பிரச்சினைக்கான புதிய அரசியலமைப்புக்கான உத்தேச வரைபு நாடாளுமன்றத்தில் சந்திரிக்கா ஆட்சியில் சமர்ப்பித்த போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் உத்தேச வரைபின் பிரதிகளை நாடாளுமன்றத்தில் தீயிட்டு கொழுத்தினார்.
2002 ஆண்டு சமாதான உடன்படிக்கையில் விடுதலைப் புலிகளுடன் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் கையொப்பம் இட்ட ரணில் விக்கிரமசிங்க எதிர்த் தரப்பை உடைத்து பலவீனப்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசு முள்ளிவாய்க்கால் இனப் படு கொலை ஒன்றை அரங்கேற்றுவதற்கு எதிர்கட்சி தலைவராக இருந்து பூரண ஆதரவு வழங்கினார்.
நல்லாட்சி அரசில் மைத்திரிபால சிறிசேனவை பலவீனப்படுத்தி புதிய அரசியலமைப்பு விடயம் பலவீனப்படவும் கலப்புப் பொறிமுறையில் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதாக கால நீடிப்பை பெற்று ஏமாற்றியதையும் மாகாணசபை தேர்தலை நடத்த விடாது தடுப்பதற்கு தேர்தல் முறையில் திருத்தம் என்ற நாடகத்தில் எல்லை நிர்ணய விடயத்தை வைத்து தேர்தலை தடுத்தமையும் வரலாறு.
ரணில் விக்கிரமசிங்க தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை திட்டமிட்டு சீரழித்து விட்டு கிடைத்த காலத்தில் நிறைவேற்றக் கூடிய நல்ல விடயங்களை அரசியலாக மாற்றி விட்டு அதிகாரங்கள் இழந்த நிலையில் பித்தலாட்டம் போடுவதில் அர்த்தமில்லை அதே நேரம் வரலாறு மன்னிக்கப் போவதில்லை என தெரிவித்தார்.