“அநுர அரசு மாகாண சபை முறைமையில் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் தாம் நியமித்த ஆளுநர்களையே மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இணைத்தலைவர்களாக நியமிக்காததிலிருந்து இந்த அரசு மாகாண சபை முறைமையை எந்தளவுக்கு விரும்புகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது:-
“மாகாண சபைத் தேர்தல், மாகாண சபை முறைமை பற்றி எல்லோரும் இப்போது கதைக்கின்றனர்.
இதுவரையில் மாகாண சபை முறைமை வந்த காலப் பகுதியிலிருந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக மாகாண ஆளுநர் எல்லா மகாணங்களிலும் இருந்துள்ளார்கள். ஆனால், இப்போது எல்லா மாகாணங்களிலும் ஆளுநர்கள் இணைத்தலைவராக நியமிக்கப்படவில்லை. ஆக எந்தளவுக்கு இந்த அரசு மாகாண சபை முறைமையை விரும்புகின்றது என்பது இதிலிருந்து தெரிகின்றது.
தாங்கள் நியமித்த ஆளுநர்களையே இணைத்தலைவராக இவர்கள் நியமிக்கவில்லை. தாம் நியமித்த தமது கட்சியின் அரசியல்வாதியான தலைவரோடு மட்டும் நிறுத்திக் கொண்டார்கள். இதை யாரும் கவனிக்கவில்லை.
மாகாண நிர்வாகத்தையும் மத்திய நிர்வாகத்தையும் ஒருங்கிணைப்பதற்கான தளமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இருக்கின்றது. அதற்காகவே மாவட்ட இணைத் தலைவர்களாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால், இந்த அரசு அதைச் செய்யவில்லை. இதில் இருந்து இந்த அரசு மாகாண சபை முறைமையில் எவ்வளவு விசுவாசமாக உள்ளது என்பது தெரிகின்றது.
ஆளுநரும் அவர்களது நியமனம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கட்சி நியமனம். ஆகவே, மத்திய அரசு தேசிய மக்கள் சக்கியுடையது. இந்த நாடாளுமன்றமும் அவர்களுடையதாக இருக்கலாம். ஆனால், உள்ளூராட்சி சபை என்பது உள்ளூர் மக்களுடையது. உள்ளூர் கட்சிகளின் தலைமையில் உள்ளூராட்சி சபைகள் இருக்க வேண்டும். இதைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கை முழுவதும் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இணைத் தலைவர்களாக அவர்களது ஆளுநர்களையே அநுர அரசு நியமிக்காததை வைத்துக்கொண்டே மாகாண சபை முறைமையில் அவர்கள் எவ்வளவு கரிசனை வைத்திருக்கின்றார்கள் என்பதை எமது தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.