உருகுவேவைச் சேர்ந்த இளம் உதைபந்து வீரரான நிகோலஸ் ஃபோன்சேகா மெக்சிகோவைச் சேர்ந்த லியோன் எனும் கழகத்திற்காக விளையாடிவரும் நிலையில் மெக்சிகோ நாட்டில் வழிப்பறி செய்யப்பட்டு அவரது வாகனம் பறிக்கப்பட்டுள்ளது.
நிகோலஸ் தனது அணியுடன் பயிற்சி மேற்கொள்வதற்காக மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாநிலத்தின் லியோன் நகரத்தை நோக்கி தனது வாகனத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்த போது ஜலிஸ்கோ மாநிலத்தின் அருகிலுள்ள நெடுஞ்சாலையில் வைத்து மர்ம நபர்கள் அவரிடம் வழிப்பறி செய்து அவரது வாகனத்தை பறித்து சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், நிகோலஸ் கடத்தப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் அவரது அணி அதனை மறுத்துள்ளது. இதுகுறித்து அவரது அணியின் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிகோலஸ் தற்போது நலமாகவுள்ளதாகவும், அவரது அணியினருடன் இணைந்து வரக்கூடிய போட்டிக்காகத் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர்களை பிடிக்க குவானாஜுவாடோ பொலிஸார் ஜலிஸ்கோ அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர். ஆனால், இந்த வழிப்பறியானது எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.