வவுனியா ஊடகவியலாளரின் கோரிக்கையையடுத்து இரவு நேர களியாட்ட நிகழ்வுகளில் அதிக ஒலி எழுப்புவதை மட்டுப்படுத்துமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் உத்தரவு
வவுனியாவில் தற்போது இடம்பெற்று வரும் களியாட்ட நிகழ்வுகளின் போது பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி அதிக ஒலி எழுப்புவதை மட்டுப்படுத்துமாறு வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜேஜசேகர அவர்களால் இன்று (07.03) கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை நெருக்கும் நிலையில் வவுனியாவில் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் அதிக ஒலியுடன் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும், அது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை வவுனியா ஊடகவியலாளர்கள் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
இதனையடுத்து இரவு நேர களியாட்ட நிகழ்வுகளின் போது அதிக ஒலி எழுப்புவதை உடனடியாக நிறுத்துமாறும், நிகழ்வு நடைபெறும் இடத்திற்குள் மட்டும் ஒலியை மட்டுப்படுத்துமாறும், கற்றல் செயற்பாட்டை பாதிக்காத வகையில் நிகழ்வை நடத்தமாறும் நிகழ்வுக்கான கால நீடிப்புகளை வழங்க வேண்டாம் எனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜய சோமமுனி அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி கல்விப் பொதுச் சாதாரண தரப்பரீட்சை ஆரம்பிக்கவுள்ள நிலையில் தற்போது இடம்பெற்று வரும் களியாட்ட நிகழ்வுகளுக்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Good