கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவுக்கான முன்னாயத்த கூட்டம் இன்று (07.03.2025) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், ஆலய முன்றலில் நடைபெற்றது.
புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் 11.03.2025ம் திகதி அன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வருடாந்த பொங்கல் உற்சவ ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த ஆலோசனைக் கூட்டமானது காலை 10.00 மணியளவில் நாகதம்பிரான் ஆலய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நடைபெற்றது.
இப் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெறுவதற்கு ஏற்ற வகையில் ஆலய சுற்று சூழலை சிரமதானம் செய்தல், ஆலய வீதி திருத்தங்கள், போக்குவரத்து வசதிகள், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
மேலும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சபை ஆகியன இணைந்து சுமூகமான முறையில் சேவையினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் பங்குபற்றளுடன் எதிர்வரும் 21ம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட இன்றைய கூட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் 28.03.2025ம் திகதி கலந்துரையாடலொன்றை நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி. பிருந்தாகரன், உதவி மாவட்ட செயலாளர்ஹ. சத்தியஜீவிதா, கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவனருள்ராஜா, துறை சார்ந்த திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள், பொலிஸார், ஆலய பரிபாலன சபையினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


