வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடலோர மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில்துறையை நம்பியுள்ளதாகவும், அதுவே அவர்கள் அறிந்த ஒரே வாழ்வாதார நடவடிக்கை என சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ மக்களுடைய குறித்த வாழ்வாதாரத்தை சுரண்டுகின்ற வகையில் செயற்படும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழில் அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில் செயற்படும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த தவறினால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி மீனவர்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படுமெனவும், அத்தகைய நிலையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரித்தார்.
நாடாளுமன்றில் இன்று (05.03.2025) இடம்பெற்ற 2025 வரவு செலவுத்திட்ட கடற்றொழில் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கௌரவ கடற்றொழில் அமைச்சர் அவர்களே,
இந்திய இழுவைப்படகுகள் செய்யும் அத்துமீறிய செயல்களினால் எமது வடக்கு மீனவர்கள் தொழில் செய்யமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
எமது மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றது. வடக்கு மீனவர்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்படுகின்றது.
இந்திய விசைப்படகுகள் மீன்பிடியில் மிகவும் அழிவுகரமான முறைகளிலொன்றாகக் கருதப்படும் அடித்தள இழுவை வலை பிரயோகத்தை மேற்கொள்கின்றன.
ஆழ்விசைப்படகுகள் “கடலின் ஹூவர்ஸ் (hoovers of ocean) என்றும், புல்டோசர்கள் போன்று மீன் மற்றும் பிறஅடித்தாள மீன் இனங்களை அழித்தொழிக்கின்றன.
இலங்கைப் பெருங்கடலில் இந்த புல்டோசிங் அடித்தள விசைப்படகுகளின் செயற்பாடுகள் தொடர்ந்தால் விரைவில் எந்த மீனும் கடலில் பிடிக்க இயலாதநிலை ஏற்படும்.
அடித்தள இழுவைவிசைப்படகு கடல் தளத்தை சிதைத்து, கடல்சூழலை சீர்குலைத்து பழைய பவளப் பாறைகளை சேதப்படுத்துகின்றது. பிளாங்கடன்களின் வளர்ச்சியை பாதிக்கின்றது. மற்றும் இறுதியாக ஆழ்கடல் இனங்களில் உள்ள கடல் பாறைமீன் (Reef Fish) இறால் மற்றும் பிறவகைகளை பாதிக்கின்றது. இது வாழ்விட சீரழிவுக்கு வழிவகுக்கும். கூடுதலாக இழுவைவிசை இழுத்தல் உண்மையில் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத முறையாகும்.
ஏனெனில் இலக்கு அல்லாத உயிரனங்களும் பிடிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலும் அழிக்கப்படுகின்றது. இவ்வாறான இழுவை வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் கரைக்கு வந்தபிறகும், தாங்கள் விற்கக்கூடிய மீன்களை மட்டும் எடுத்துக்கொண்டு இலக்கு இல்லாத கடல் உயிரினங்களை, மீன் இனங்களை அப்புறப்படுத்துகின்றார்கள்.
இலங்கையின் கடலோர மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில்துறையை நம்பியுள்ளனர்.
அதுவே அவர்கள் அறிந்த ஒரே வாழ்வாதார நடவடிக்கையாகும். அந்த வாழ்வாதாரம் அழிக்கப்பட்டால், மனித பாதுகாப்பை பாதிக்கும் வகையிலான மிகப்பெரிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விளைவுகள் ஏற்படும்.
எல்லையைக் கடக்கும் மீன்பிடிக்கப்பல்/படகுகள் தவறுகலாக ஒரு சிறிய சதவீத நிகழ்வுகளை மட்டுமே உள்ளடக்கியது என்பது அனைவரும் அறிந்த உண்மை. பெரும்பாலான எல்லைக் கடப்புகள் வேண்டுமென்றே இலங்கைக்கடல் எல்லைகளுக்குள் ஆழமாகப் பயணிப்பதை உள்ளடக்கியது. ராமேஸ்வரம் மீன்பிடிப் படகுகள் இலங்கைப் பகுதியில் மட்டுமே நல்ல மீன்பிடி மைதானங்களை காண்கின்றன. எனவே அவற்றின் பெரும்பாலான மீன்பிடித்தல் அந்தப்பக்கத்தால் இடம்பெறுகின்றதென்பது வெளிப்படையான ரகசியமும், உண்மையுமாகும்.
இலங்கைக் கடற்பரப்பில் பிரதானமாக இறால் பெறப்படுவதால், பெரும்பாலான விசைப்படகுகள் பெலாஜிக் அல்லது விரிகடலுக்குரிய இழுவை வலைகளுடன் ஜோடியாக இழுவைசெய்யும் இந்திய விசைப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பை அடைகின்றன. ஒன்றுவிட்ட ஒவ்வொரு நாளும், கிட்டத்தட்ட 500 இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.
பல பாதுகாவலர்களும், சர்வதேச விஞ்ஞானிகளும் இழுவை வலைகள் கண்மூடித்தனமாக அனைத்து கடல் வளங்களையும் அழிப்பதால் அவற்றை முழுமையாக தடைசெய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். மீன்வள விஞ்ஞானிகளின் ஆலோகனைகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இலங்கை கடற்பரப்பில் அடித்தள இழுவைப் படகுகளை இயக்கத்தடை விதித்தது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் ஐந்து மாவட்டங்களில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஆகிய நான்கு மாவட்டங்களில் மீன்பிடியாளர்கள் தமது முழுமையான வாழ்வாதாரமாக மீன்பிடியையே நம்பியுள்ளனர்.
நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் இந்தக் குடும்பங்களின் உணவுத் தேவைகள், பிள்ளைகளின் கல்வித் தேவை உட்பட அத்தியாவசியத் தேவைகள் இந்தக் கடலையே நம்பி, இதனால் கிடைக்கும் வருமானத்தை தமது வாழ்வாதாரமாக எண்ணி இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் கொடூரமான வகையில், மிகவும் கொடூரமான முறையில் சட்டவிரோதத் தொழில்கள் செய்து, இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டதாக அறியத்தந்திருக்கும் தொழில்களைக் கொள்ளையர்களைப்போல செய்துகொண்டிருக்கும், திருட்டுக்கும்பலை பிடிக்காமல் சட்டத்தின்முன் நிறுத்தாமல் இருக்க காரணம்தான் என்ன?
உங்களுடைய மீன்பிடியாளர் சமூகத்தை புறக்கணிக்க வேண்டாம். வயிற்றில் அடிக்ககேண்டாம்.
எமது மீனவர்களை வாழவிடுங்கள். என்று தான் கேட்கின்றோம். சட்டவிரோத கடற்றொழில்களைச் செய்து மீனவர் சமூகத்தை அழித்துக்கொண்டிருக்கும் இலங்கையிலுள்ள சட்டவிரோதிகளையும், எல்லை தாண்டிவந்து எமது கடல் வளங்களை அழிக்கும் அயல்நாட்டு சட்டவிரோதிகளையும் தண்டியுங்கள்.
எமது மக்களை மேலும், மேலும் காயப்படுத்தாமல் கடற்படை, பொலிசார், கடற்றொழில் திணைக்களப்பணியாளர்கள் தங்களுடைய கடமைகளைச் சீராகச் செய்தால் நிலமைகள் சீராகும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தால் இந்தப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
சட்டங்களை உருவாக்கி வைத்துக்கொண்டு, அதனை முழுமையாக செயற்படுத்தாமல் எமது மீனவ மக்களின் வாழ்வை அழித்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.
கடற்றொழில் அமைச்சர் அவர்களே, எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாங்களும் அறிவீர்கள்.
இந்திய இழுவைப்படகுகள் தமது எல்லைகளைத்தாண்டி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைகின்ற விவகாரத்தில் இந்திய அரசாங்கம், இந்திய கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினரும் பிழையான விதத்தில் செயற்படுகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றேன்.
இந்திய கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை இந்திய அரசும், இந்திய கடற்படையும் தடுக்கவேண்டும்.
அதேபோல் இலங்கைக் கடற்படையினரும் இந்த இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழையும் விடயத்தில் பொறுப்பற்று செயற்படுகின்றனர்.
அண்மையில் மியன்மார் நாட்டு அகதிகள் படகொன்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு வருகைதந்தது. குறித்த அகதிகள் படகு முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு வருகைதரும்வரை கடற்படையினருக்குத் தெரியாது. அவ்வாறெனில் கடற்படையினர் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கைக் கடற்பரப்பினைப் பாதுகாக்க வேண்டியது இலங்கைக் கடற்படையின் பொறுப்பாகும். ஆகவே இந்த விடயத்தில் கடற்றொழில் அமைச்சரே நீங்கள் தலையீடு செய்யுங்கள். மீனவ மக்களைக் காப்பாற்றுங்கள்.
இல்லையேல் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் மீனவ மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள். அந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள் – என்றார்.