நீர்கொழும்பு பகுதியில் 10 கோடி ரூபா பெறுமதிமிக்க போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, கொப்பரா சந்திக்கருகில், கொழும்பு குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றைச் சோதனையிட்டபோது அதிலிருந்து பெருமளவான போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர் 5 இலட்சம் போதைமாத்திரைகளை வேனில் கடத்திக் கொண்டு சென்றதுடன் அதன் சந்தைப் பெறுமதி சுமார் 10 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டது.
சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி மற்றும் வேன் ஆகியன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேவேளை, குறித்த போதை மாத்திரைகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.