அகில இலங்கை மல்யுத்த போட்டியில் சம்பியன் கிண்ணத்தினைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த மட்டக்களப்பு நொச்சமுனை சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(01) மாலை நடைபெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட தேசிய மல்யுத்த போட்டியிலேயே இந்த சாதனை படைக்கப்ப்டுள்ளது.
இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள துளசி மண்டபத்தில் நடைபெற்றது.
சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக செயலாளார் திருச்செல்வத்தின் ஓழுங்கமைப்பிலும் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டிலும் முகாமையாளர் ஸ்ரீகந்தராஜா தலைமையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனும் கௌரவ அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜெயக்குமார், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் மா.சசிக்குமார், விளையாட்டு அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் ஆதம்லெப்பை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில் மல்யுத்த துறையில் உலக சாதனைகளை படைத்த சாண்டோ சங்கரதாஸ், சாண்டோ தியாகராஜா மற்றும் மாவட்டத்தில் மறைந்த விளையாட்டு வீரர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தியதன் பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை மல்யுத்தப் போட்டியில் சாதனைகளை நிலை நாட்டி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தினை தேசிய சம்பியனாக மாற்றிய வீரர்கள் இதன்போது அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.
2025 விளையாட்டு அமைச்சின் உள்ளக அரங்கிலே கடந்த மாதம் 22, 23ம் திகதி நடைபெற்ற மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக போட்டியிட்ட சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழக வீரர்கள் 2 தங்கப்பதக்கம், 3 வெள்ளி பதக்கம், 1 வெண்கலப் பதக்கம் உட்பட ஆறு பதக்கங்களை பெற்று 20 புள்ளிகளை பெற்று வரலாற்றில் முதல் தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.
இதன்போது சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் பிரதம பயிற்றுவிப்பாளரும் கழகத்தின் செயலாளருமான திருச்செல்வம் அவர்களை மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் மா.சசிக்குமார் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்த சிறப்பு நிகழ்வில் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் மாணவர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.











