எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
இன்று முற்பகல் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்றைய சந்திப்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, சமத்துவ கட்சி ஆகிய 8 கட்சிகள் கலந்துகொண்டன.
கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைத்து கட்சிகளும் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
ஆனால் குறித்த கூட்டணியில் இணைந்துகொள்வது குறித்து தமிழ் மக்கள் கூட்டணி இதுவரை இறுதி முடிவினை எடுக்கவில்லை என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
கலந்துரையாடலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி. ரவீந்திரா (வேந்தன்), தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.




