கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ரன்முத்துகல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (24) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று அதே திசையில் பயணித்த உந்துருளி ஒன்றுடன் மோதியதில், உந்துருளியானது வீதியில் சறுக்கிச் சென்று பெண் பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் பாதசாரியும் உந்துருளியின் செலுத்துனரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உந்துருளியின் செலுத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கார் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.