மீனவர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வுகான கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமானது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
கடந்த 22-ஆம் திகதி, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த மீனவர்களை மார்ச் 7-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அனைத்து தரப்பு மீனவர்களிடம் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை மீனவர்கள் அறிவித்தனர்.
இதனால், சுமார் 600-க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையினரின் இத்தகையை செயல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் மீனவர் சங்கங்கள் சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.