“வடக்கில் மக்களின் உண்மையான தேவைக்கு அமைய வழிபாட்டு ஸ்தலங்கள் (விகாரைகள்) அமைக்கப்பட்ட விவகாரம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். குறுகிய அரசியல் இலாபம் தேடும் குழுவினர் இதுபோன்ற சம்பவங்களை அரசியல் முரண்பாடுகளாக்குகின்றனர். இதுபோன்று குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாதம், மதவாதத்தைத் தூண்டுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சில வழிபாட்டு ஸ்தலங்களை (விகாரைகள்) அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இதன்போது, கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
“மதவாதம் மற்றும் இனவாதம் என்பன அரசியலில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும். வடக்கில் மக்களின் உண்மையான தேவைக்கு அமைய இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். குறுகிய அரசியல் இலாபம் தேடும் குழுவினர் இதுபோன்ற சம்பவங்களை அரசியல் முரண்பாடுகளாக்குகின்றனர்.
இதுபோன்று குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாதம், மதவாதத்தைத் தூண்டுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.” – என்றார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களுடன் கூடிய காணிகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பிலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,
“வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாடு முழுவதிலும் முப்படையினரின் பாவனையில் உள்ள காணிகள் தொடர்பில் மீண்டும் மதிப்பாய்வு மேற்கொண்டு காணிகளை விடுவிப்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.



