“பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் விரிவடைந்திருக்கின்றன. இது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகக் குழுக்களை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதற்காகச் சிறிது காலம் எடுக்கும்.”
- இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பு தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இது தொடர்பில் முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சோதனையிடுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தேசிய அனர்த்தக் குழுவை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கான நடவடிக்கையை விரைவில் பூர்த்தி செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் (மேஜர் ஜெனரல்) அருண ஜயசேகர (ஓய்வுபெற்ற), அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வுபெற்ற), முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள், நாடாளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.




