மூத்த பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி அவர்களின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் என மட்டு ஊடக அமையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் அமரர் இராஜநாயகம் பாரதி அவர்களின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மட்டு ஊடக அமையத்தின் செயலாளர் செ.நிலாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
மறைந்த மூத்த ஊடகவியலாளர் அமரர் இராசநாயகம் பாரதி அவர்களுக்கான அஞ்சலி நிகழ் இன்று சனிக்கிழமை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மட்டு ஊடக அமைய தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் மற்றும் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மூத்த ஊடகவியலாளர் அமரர் இராஜநாயகம் பாரதி அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.
இதன்போது கருத்து தெரிவித்த ஊடக அமையத்தின் செயலாளர் செ.நிலாந்தன்,
மூத்த பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி அவர்களின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கும், ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைக்கான போராட்டத்திற்கும் பேரிழப்பாக மாறியுள்ளது.
யுத்தம் நடைபெற்ற காலத்திலும், யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதில் மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டவர் பாரதி அண்ணன்.
இலங்கையில் சுமார் 35 ற்கு மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும். தமிழ் ஊடகத்துறை மீது மிகப்பெரிய அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் தென்னிலங்கையில் இருந்து கொண்டு மிகவும் துணிவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவந்தவர்.



