முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் திரு சின்னப்பா நாகேந்திரராசா அவர்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமானது கடந்த 11.02.2025 அன்று பாடசாலையின் பிரதான வாயில் முன்பாக நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து நடாத்திய போராட்டத்தில் “பொறுப்பேற்ற அன்று பாடசாலை முன் வீழ்ந்து வணங்கினாய். பாடசாலை சொத்துக்களை மோசடி செய்யவா அந்த நாடகம், அதிபர் சி.நாகேந்திரராவின் 2010 தொடக்கம் இன்று வரையான மோசடிகளுக்கு ஆதாரங்களை தருகிறோம். நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாரா? , பொன்விழாவை குழப்பிய அதிபரே உடன் வெளியேறு, மாகாண கல்வி அமைச்சே! தகுதி இல்லாதவனை அதிபராக்கி மோசடிகளுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன்?, செய்யாதே செய்யாதே அரச சொத்துக்களை ஊழல் செய்யாதே, பாலியல் துஸ்பிரயோக குற்றத்தில் ஆசிரியராக வெளிமாவட்ட இடமாற்றம் பெற்று வந்தவரை பிரதி அதிபராக்கி மாணவர்களது எதிர்காலத்தை அழிக்காதே!, மாகாண கல்வி அமைச்சே ஊழல் நிரூபிக்கப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, மோசடியில் மூழ்கிய அரக்கனே எமது பாடசாலையிலிருந்து உடனே வெளியேறு, வேண்டாம் வேண்டாம் அதிபர் நாகேந்திரராசா எமது பாடசாலைக்கு வேண்டாம், அதிபர் நாகேந்திரராசாவின் மோசடிகளுக்கு அரசியல்வாதிகளே தலையிடாதீர்கள், 10 இலட்சம் பெறுமதியான கணனி உட்பாகங்கள் எங்கே, அதிபர் நாகேந்திரராசாவின் கடந்தகால மோசடிகளுக்கு இன்றுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்” என பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறு பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்ட இடத்திற்கு வருகைதந்த ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் ஆகியோரிடம் போராட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதுடன் மேன்மைதங்கிய ஜனாதிபதி, பிரதமர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றப்புலனாய்வு திணைக்களம், தேசிய கணக்காய்வு அலுவலகம் என பல்வேறு தரப்பினருக்கும் தபால் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா மீது நிர்வாக சீர்கேடுகள் நிதி, சொத்து மோசடிகள் என 36 விடயங்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதாகவும் குறித்த அதிபருக்கு மாகாண கல்வி அமைச்சினால் 6 விடயங்களுக்கு மட்டுமே குற்றப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணையானது கண்துடைப்பு விசாரணையாக அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் ஊழலுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அதிபருக்கு சார்பாக செயற்படும் சிலர் போராட்டத்தை குழப்புவதற்கு முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் தங்களால் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்ட 36 விடயங்களையும் உள்ளடக்கியே விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளதுடன் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டும் குறித்த அதிபர் பாடசாலையில் கடமையாற்றும்போதே முறைமைசார் விசாரணை நடைபெறுகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோரால் வழங்கப்பட்ட மகஜரில் குறித்த அதிபரின் ஊழல் முறைகேடுகள் உள்ளடங்கிய ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்கள் 2010 தொடக்கம் இன்றுவரை அதிபராக கடமையாற்றிய பாடசாலைகளில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு கடந்தகால மோசடிகளில் காப்பாற்றப்பட்டதை போன்று காலம் கடத்தப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதால் குறித்த அதிபரால் எமது பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட அரச சொத்து ஊழல் மோசடிகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் காப்பாற்றப்படும் என்பதாலும் எமது பாடசாலையின் வளங்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என்பதாலும் குறித்த அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களின் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நிதி மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
குறித்த அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களை எமது பாடசாலையிலிருந்து வெளியேற்றி எமது பாடசாலைக்கு தகுதியான அதிபர் ஒருவரை நியமிப்பதுடன் அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்கள் கடமையாற்றிய அனைத்து பாடசாலைகளிலும் அபிவிருத்திச் சங்க கணக்குகள், பாடசாலை சொத்துக்கள், பாடசாலைக்கு சொந்தமான காணிகளின் விவசாய குத்தகை வருமானங்களை மீள் கணக்காய்வு செய்து அரச சொத்துக்களை பாதுகாப்பதற்கு ஆவண செய்வதுடன் வீழ்ச்சியடைந்து செல்லும் எமது பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்காகவும், எமது பாடசாலையின் அரச சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களை எமது பாடசாலையிலிருந்து உடன் வெளியேற்றி உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.