யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது
இதன்போது பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்தும் அனுமதியை பிரதேச ஒருங்கிணைப்பு குழு இன்மையால் அதை நடைமுறைப்படுத்தும் அனுமதிக்காக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் விடப்பட்டது.
இதன்போது அபிவிருத்திக்காக யாழ்ப்பாணத்துக்கு 56 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை நாடாளுமன்ற உறுப்பினர்களை புறந்தள்ளி அரச அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு எடுத்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து சமர்ப்பிக்கப்பட முன்மொழிவு மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் சமர்பிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டது.
குறிப்பாக 2025 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் முன்னரான முன்மொழிவின் கீழ் ஒதுக்கப்பட்ட 56 மில்லியன் நிதியை மாவட்ட செயலகம் ஊடாக கையாள்வது என்ற முன்மொழிவு வைக்கப்பட்டபோது அதை ஏற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விவாதித்திருந்தார்.
நிதி திட்டமிடல் பொருளாதார அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் பிரதேச மட்டத்தில் எடுக்கப்படும் முன்மொழிவை மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுத்தல் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறிப்பாக கடந்த 77 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் அவிருத்தி தொடர்பான திட்ட முன்மொழிவு பொறிமுறையை இம்முறை மாற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுகின்றது. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
குறிப்பாக கடந்த ஆட்சியில் இவ்வாறான ஒரு நிலை கொண்டுவரப்பட்டது. ஆனால் அன்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அவர் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் அடிப்படையில் மேலதிகமாக நிதி ஒதுக்கீடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அவ்வாறான ஒரு நிலை இல்லாதுள்ளது.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாத இந்த சமர்ப்பிப்பை ஏற்க முடியாது.
இதை மாற்றியமைத்து நாடளுமன்ற உறுப்பினர்களது முன்மொழிவுகள் உள்ளடக்கபட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரது வலியுறுத்தலுக்கு இணங்கிய ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த 56 மில்லியன் நிதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாவட்டத்தில் ஒருவருக்கு 9 மில்லியன் நிதி ஒதுக்கப்படுள்ளதுடன் அதனடிப்படையில் முன்வைக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கம் காணப்பட்டது.