பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் இன்று பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை திடீர் மின் விநியோகத் தடை ஏற்பட்டது.
பாணந்துறை கிரிட் துணை மின் நிலையத்துடன் குரங்கு மோதியதால் நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டது என்று மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தால் நாடு முழுவதும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது என்றும், மின் விநியோகத்தில் பாரிய இடையூறு ஏற்பட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையால், தேசிய மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுடன் இணைந்து நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
எனினும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பின்னர் நிலைமையை ‘பாணந்துறை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலை’ என்று விவரித்தது. ஆயினும் அமைச்சரின் கூற்றை அமைச்சு உறுதிப்படுத்தவில்லை.
“மறுசீரமைப்பு முயற்சிகள் விரைந்து நடந்து வருகின்றன, அதிகாரிகள் குழுக்கள் கூடிய விரைவில் மின்சாரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வர வேலை செய்கின்றன.” – என்று பிற்பகலில் மின்சக்தி அமைச்சுத் தெரிவித்தது.
மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்தபடி மாலை 4 மணிக்குப் பின்னர் நாட்டின் ஒவ்வொரு பிரதேசமாக மின் இணைப்பு மீளக் கிட்டியது.
மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் முழு அளவில் செயற்பட்டு வருகின்றனர் எனவும், திடீரென ஏற்பட்ட மின்வெட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபை இன்னும் உத்தியோகபூர்வ விளக்கத்தை வெளியிடவில்லை. மேலும் மேம்படுத்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.