இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
மாவை சேனாதிராஜாவின் மறைவின் பின்னராக அவரின் மறைவுக்குக் காரணமானவர்கள் எனக் கூறி தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த 19 பேர் மீது கட்சியின் ஒரு சிலர் குற்றஞ்சாட்டி வந்திருந்தனர்.
மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி வீழ்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்த நிலையில் அவரின் மறைவுக்கு மன அழுத்தமே காரணம் என்பதாகக் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டது.
அதிலும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் மாவை சேனாதிராஜாவை ஆதரிக்காத 19 உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் மரணச்சடங்குக்கு வரக் கூடாது என்றவாறாக பெயர் விவரங்களைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில் மாவை சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வில் மேற்படி 19 பேரின் பெயர் விவரங்கள் படங்களுடன் பனர் அடித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்து. இந்த விவகாரம் கட்சிக் கூட்டத்தில் பெரும் பூதாரமாகும் நிலை ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான நிலைமையில்தான் இந்தப் பனர் அடித்தது மற்றும் கட்சியின் சக உறுப்பினர்களுக்கு எதிரான பிரசாரங்கள் போன்ற விடயங்கள் தெடர்பில் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவத்தில் யார் யாருக்குத் தொடர்பு இருக்கின்றது என்ற கோணத்தில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் தெரியவருகின்றது.