சுமார் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சென்னையில் கையடக்கத் தொலைபேசி விற்பனை வர்த்தகத்தை நடத்தி வரும் 45 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் பயணப் பையிலிருந்து டொஃபி மற்றும் சொக்லேட் பைகளில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12.5 மில்லியன் ரூபா மதிப்புடைய 1 கிலோ கிராம் 40 கிராம் “குஷ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர், இந்தியாவின் புதுடில்லியிலிருந்து நேற்றையதினம் மாலை 05.10 மணிக்கு AI-281 என்ற இந்தியா விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சந்தேகநபரின் சகோதரர்களில் ஒருவர் கொழும்பில் வசிப்பதாகவும், மேலும் அவர் தனது சகோதரனை சந்திப்பதாக கூறி பல சந்தர்ப்பங்களில் நாட்டிற்கு வருகை தந்திருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் இன்று புதன்கிழமை (05) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.