இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு இன்றையதினம் (4) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை 7.45 மணிக்கு முல்லைத்தீவு நகர மையத்தில் உண்ணாப்பிலவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை மாணவிகளின் பான்ட் வாத்திய அணிநடையுடன் மாவட்ட செயலக முன்றலுக்கு உத்தியோகத்தர்கள் அழைத்துவரப்பட்டு காலை 8.04 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து 8.10 மணிக்கு அரசாங்க அதிபரினால் தலைமையுரை நிகழ்தப்பட்டது. குறித்த உரையில் இன மத பேதமின்றி தேசத்தை கட்டியெழுப்பிடவும் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வறுமையைப் போக்கிடவும் அனைவரும் வினைத்திறனாக செயலாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து காலை 8.25க்கு ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க அவர்களின் 77 ஆவது சுதந்திரதின சிறப்புரையினை காணொளியாக அனைத்து உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பார்வையிட்டனர்.
மேலும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட முதியவர்கள் எட்டுப் பேருக்கு கண்வில்லைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியாக மாவட்ட செயலக வளாகத்தில் மரநடுகைத் திட்டத்தை ஆரம்பித்ததுடன் சுதந்திரதின நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட செயலகத்தின் ஓய்வுநிலை பிரதம கணக்காளர், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.









