இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதைப்பாவனையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும் என யாழ் . பல்கலைக்கழக பேராசியர் சி. ரகுராம் அறைகூவல் விடுத்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலான போதைப்பாவனையை தடுத்து நிறுத்துக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவனாக, பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஆரம்பித்துள்ள போதைக்கு எதிரான போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுப்பவனாக சமூகத்திடம் தாழ்மையான வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.
போதைப்பாவனை எமது சமூகத்தை எல்லா விதத்திலும் பாதித்துள்ளது. பல்கலைக்கழகம் மாத்திரமல்ல, பாடசாலைகள், சமூக நிறுவனங்கள் என ஊடுருவியுள்ள போதைப்பாவனை எங்களுடைய சக்தி மிகு இளம் சமுதாயத்தை சீரழித்து வருகிறது.
இந்த போதைப்பாவனை சுயமாக சிந்திக்க கூடிய எங்கள் இளம் சமுதாயத்தை மிக அசிங்கமான வழியில் சீரழித்துக்கொண்டு இருக்கிறது.
போதைப்பாவனையை ஊக்கப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக , அதனை எதிர்த்து நிற்கும் மிக பெரிய சமூக பொறுப்பு எங்களுக்கு இருப்பதாக கருதுகிறேன்.
சக்திமிக்க, உலகத்தையே மாற்றியமைக்க கூடிய மாணவ சமுதாயம் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றது. பாடசாலைகள் இந்த போதைப்பாவனையை தடுத்து நிறுத்த முடியாமல் திகைத்து நிற்கின்றன.
இந்த மண் இளம் குருத்துக்களை போதைப்பாவனை அற்ற சமூகமாக உருவாக்கி நின்ற மண்.
இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஆரம்பித்துள்ள போதைக்கு எதிரான போராட்டம், ஒரு சமூக போராட்டமாக உருவாக வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பாடசாலைகளிலும், சமூகத்தை பற்றி சிந்திக்க கூடியவர்கள் இந்த தருணத்தை எங்களுக்காக ஒதுக்கி, இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதைப்பாவனையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்க கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும்.
தனி நபராக, சமூகமாக இந்த கால பொறுப்பை பற்றி சிந்தியுங்கள். போதைக்கு எதிராக மிகப் பெரிய செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய கால கட்டமாகும்.
உங்களுடைய ஒவ்வொரு பிள்ளைகளையும் இந்த போதைப் பழக்கத்தில் இருந்து விடுவித்து, எங்கள் சமூகத்தை ஆரோக்கியமான சமூகமாக மாற்ற திடசங்கற்பம் பூணுவோம் என தெரிவித்தார்.