இன்றைய இளையோரின் சிந்தனைகள் தடம் மாறமால் இருக்க வேண்டுமானால் இளங்கலைஞர் மன்றம் போன்று பல்வேறு தளங்கள் உருவாக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
நல்லூர் இளங்கலைஞர் மன்றம் புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை (25.01.2025) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள், ஒவ்வொரு நிகழ்விலும் அந்த இடங்களைப்பற்றி அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த பெரியவர்கள் பற்றிக் கூறுவதை ஒரு நூலாகத் தொகுத்து வெளியிட்டால் எதிர்கால சந்ததிக்குப் பெரும் பேறாக இருக்கும். அவ்வளவு விடயங்களை அவர் தெரிந்து வைத்திருக்கின்றார். அவர் பேசும்போதுதான் பல விடயங்களை நான் கூட அறிந்துகொள்கின்றேன். இன்றைய இந்த இளங்கலைஞர் மன்றம் பற்றி எனக்குத் தெரிந்திருந்தாலும், அவர் புதிய சில விடயங்களைச் சொல்லியிருக்கின்றார்.
பதவி உயரும்போது பணிவு வரவேண்டும் என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவர் இந்த இளங்கலைஞர் மன்றத்தின் நிறுவுனர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள். இளங் கலைஞர்களின் வளர்ச்சிக்காக இரவும் பகலும் சிந்திக்கும் ஒருவர். இன்று புலம்பெயர்ந்திருந்தாலும் எமது மண்ணைப்பற்றி நினைத்துக் கொண்டு இந்த மண்ணின் முன்னேற்றத்துக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். புலம்பெயர்ந்து சென்ற சிலர் எமது ஊரை மறந்து இருக்கின்றார்கள். ஆனால் சுந்தரலிங்கம் அவர்களைப் போன்றவர்களால் எமது மண் பெருமை கொள்கின்றது.
இப்போது இசை விழாக்கள் அல்லது பொதுவான நிகழ்வுகளுக்கு ஆட்கள் வருவது மிகக் குறைவு. இன்று இந்த மண்டபம் நிறைந்திருப்பதைப்போல எதிர்காலத்திலும் இருக்கவேண்டும். இன்றைய இளையோரின் சிந்தனை திசை திருப்பப்படுகின்றது. அவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது தெரியாது, தவறான வழிக்கு வழிப்படுத்தப்படுகின்றார்கள்.
வடக்கு மாகாணத்துக்கான புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பில் என்னுடன் கலந்துரையாடினார்கள். அதற்குப் பொறுப்பானவர்கள் தங்களுக்கு இரண்டு இடங்கள் தேவை எனக் கேட்டார்கள். ஏன் இரண்டு இடம் தேவை என அவர்களிடம் நான் கேட்டேன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவை எனச் சொன்னார்கள். பெண்களுக்கும் புனர்வாழ்வு நிலையம் தேவையா எனக் கேட்டேன். இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு இலக்காகி இருக்கின்றார்கள் எனச் சொன்னார்கள். மிக மனவேதனையான விடயம். எமது இளைய சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது? இது ஆபத்தான நிலைமை. இதனைத் தடுப்பதற்கு இளையோர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடும் தளங்கள் தேவை. அதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும், என்றார் ஆளுநர்.
இளங்கலைஞர் மன்றத்தின் திறப்பு விழா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. கௌரவ விருந்தினராக இளங்கலைஞர் மன்றத்தின் காப்பாளரும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் கலந்துகொண்டார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இளங்கலைஞர் மன்றத்தின் நிறுவுனர் பொன்.சுந்தரலிங்கம், இசைவாணர் கண்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.











