“இலங்கையின் சிறந்த நண்பனாகவும் நிபந்தனையற்றதும் உறுதியுமான அயல் நாடாகவும் இந்தியா தொடர்ந்தும் செயற்படும்.” – இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
யாழ். தெல்லிப்பழையில் நேற்று நடைபெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான கலாசாரமும் வரலாற்று பிணைப்புகளும் மிகவும் ஆழமானவையாகும். எமது பாரம்பரியம் ஒவ்வொரு அம்சத்தோடும் ஊடுருவி ஒன்றுடன் ஒன்று இணைந்தே வளமான பிணைப்பை உருவாக்குகின்றது.
இந்த ஆழமான பிணைப்பு, தேவைப்படும் காலங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய உறுதியான ஆதரவு மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இந்தியா உதவி செய்தமை நீடித்த நட்புக்கான சான்றாக அமைந்துள்ளது.
இந்திய அரசால் வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் என்பன பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துகின்றன.
நிபந்தனையற்றதும் உறுதியுமான அயல் நாடாகவும் அனைத்து முயற்சிகளிலும் சிறந்த நண்பனாகவும் இந்தியா தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.” – என்றார்.