கிழக்கு மாகாண வரலாற்றில் இன ஒற்றுமைக்கு பெரும்பங்களிப்பு வழங்கிய மூதூர் மண்ணில் கல்வித் துறையில் சித்தியடைந்த தமிழ்-முஸ்லிம் மாணவர்களையும், துறை சார்ந்தவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறுவது பாராட்டத்தக்கதாகும் என மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தினால் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவான தமிழ், முஸ்லிம் மாணவர்களையும் துறைசார்ந்தவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.வை. லாபிர் அவர்களின் தலைமையில் மூதூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை,
மூவின மக்களும் வாழும் நமது கிழக்கு மாகாணத்தில் இன உறவுகளை வளர்த்தெடுக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். மூதூர் பிரதேசத்தில் பல வருடங்களாக மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கமும், அதன் தலைவர் லாபிரும் அர்ப்பணிப்போடு முன்னெடுத்து வருவது குறித்து நமது மக்கள் சார்பில் பராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் யுத்தத்தின் காரணமாக மூவின மக்கள் மத்தியிலும் அச்சமும், சந்தேகமும் நிலவி வந்தன. இவ்வேளையில் திருகோணமலை மாவட்டத்தில் சகல அரசியல் கட்சித் தலைவர்களையும், சகல சமயத் தலைவர்களையும் அழைத்து ஆயிரக்கணக்கான மூவின மக்களும் கலந்து சிறப்பிக்கக்கூடிய இப்தார் நிகழ்வை எற்பாடு செய்து இதனூடாக திருகோணமலை மாவட்டத்தில் இன ஐக்கியத்திற்கு உரமூட்டினோம்.
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அல்-இபாதா கலாசார மன்றம் கடந்த 13 வருடங்களாக புனித ரமழான் மாதத்தில் நாடாளாவிய ரீதியிலுள்ள மூத்த உலமாக்களை அழைத்து வந்து ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வை நடாத்துவதுடன் ரமழான் மாத இறுதிக்காலத்தில் 4000 மக்கள் கலந்துகொள்ளும் இப்தார் நிகழ்வையும் நடாத்தி வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு என்றும் இறைவனது அருள் கிடைக்கும்.
கல்வித்துறையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் மரணிக்கும் வரை இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் தங்களை பெற்றெடுத்து வளர்த்த தாய் தந்தையர்களுக்கும் பெரும் அர்ப்பணிப்போடு உங்களை உருவாக்கிய அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளுக்கும் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
நாம் மரணித்த பின் சுவர்க்கம் செல்வதற்கு இரண்டு கதவுகள் இருக்கின்றன அதுதான் தாய், தந்தையின் நன்மதிப்பை பெறுவதாகும். உங்கள் வாழ்க்கையில் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றி இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். நமது நாட்டில் ஜனாதிபதி பதவியைத் தவிர ஏனைய பதவிகளுக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. நீங்கள் எதிர்காலத்தில் எவ் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டாலும் எல்லா இன மக்களையும் சமமாக நினைத்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.